Sunday, January 30, 2011

ஒரு பிடி உப்பு

நம் நண்பர் கூட்டம் எல்லாரும்  கதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது  ஆனந்த வாசிப்பும் ஒரு நல்ல கதையை பற்றியாவது  எழுதலாமே என உத்தேசித்தது...... நல்ல கதையாளரின் கதையை மனம் நினைவுகளில்  தேடியது .

 ரா.கி.ர வின் `` ஒரு பிடி உப்பு `` ஞாபகம் வந்தது. கதையின் தலைப்பு  65 வருட உறுத்தல் .  தாய்மை உணர்வை போல தாய் நாட்டுணர்வை போற்றும் அற்புதமான கதை. இது ஒரு நிகழ்வுக்கதை ...

ரா.கி.ரங்கராஜன் அவர்களை முதலாம் சுஜாதா என்று சொல்லலாம்.  இதை ச்சொல்ல எனக்கு முழு உடன்பாடு இல்லை. சுஜாதா தான் இரண்டாம் ரங்கராஜன் ..என்னிடம் உள்ள அளவுகோல் சுஜாதா தானே. இக்கதை டிவிஸ்ட் கதை எனும் பொருளடக்கத்தில்  வந்து படித்த கதை ..டிவிஸ்ட் கதைகள் பெரும்பாலும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருக்கும்..  நடுவில் முடிச்சு இறுக்கப்படும் முடிவில் கடைசி வரியிலோ பத்தியிலோ எதிர்பாராமுறையில் முடிச்சு அவிழ்க்கப்படும் ..இந்த கதை சுமார் 30 பக்கக் கதை, முடிச்சை நெருங்கவே நேரமாகும் ...முடிச்சை பற்றிய எதிர்பார்ப்பே காணாமல் போகுமளவு நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முத்துச்சரம் போல கோர்த்திருப்பார் ரா.கி.ர

இனி கதை... சுருக்கமாக ..

அண்ணனுக்கு அடிபணியும் தம்பி தான் நாயகன் ராமு தன்னிலையில்.....
அண்ணனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பல வேலைகள்  அதில் உறவு நலம் விசாரித்தலும் பேணுதலும் அடக்கம் ... பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார்.
ஒரு முறை 90 வயது தாத்தா- பாட்டி முறை உறவை விசாரித்து வர உத்தரவு. குறிப்பாக பாட்டியின் உடல் நிலை குறித்து.... அந்த ஊருக்கு மிக அருகிலேயே பணி நிமித்தமும் சேர தவிர்க்க முடியாப் பயணம்..

தாத்தா பாட்டி யிடம் நல விசாரிப்புகள் ..தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி ...மிக ஆசையாக ஒரு பழைய ஒவல்டின் டப்பாவை எடுத்து வந்து காட்டுகிறார்...அதில் சத்யாக்ரக உப்பு.... பாட்டி ஓய்வுக்கு செல்கிறார்..

தாத்தா,  உப்பு சத்யாக்ரக போரட்டக்கதையை தன்னிலையில் ஆரம்பிக்கிறார் ...
தாத்தாவின் தந்தை பெரிய மிராசு என்பதில்  தொடங்கி... சி.ஆர். எனும் ராஜாஜி யின் சொற்பொழிவு கேட்டு , தனக்கும் போராட்ட உணர்வு மிக அந்த குழுவில் இடம் பிடிக்கிறார் ... தொண்டர் படையில் நேரக் காப்பாளர் பணி... காலையில் எழும் நேரம் , உணவு நேரம்.. பிரார்த்தனை நேரம்.. தொண்டர்களை  சமுக பணிகளுக்கு உசுப்பும்  பணி. 
 
பெரிய பெரிய பதவிகளை உதறிவிட்டு  சுதந்திர வேள்வியில் பலர் குதித்துள்ளனர் .. இதையெல்லாம் பார்த்த அவருக்கும் உத்வேகம் இன்னமும் மேலிடுகிறது..
உப்பு சத்யாகிரக போராட்டத்திற்கு திருச்சியிலிருந்து கிழக்கே வேதாரண்யம் நோக்கி நடை பயணமாக வருகிறது,,

வழியெங்கும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பு... வெள்ளை அரசாங்கத்தின் கெடுபிடி ...வேதாரண்யம் அடைகிறார்கள் ...

கூட்டம் கூட்டமாக முறை வைத்து  உப்பு அள்ளுகிறார்கள் . இவரது முறை வருகிறது...

உப்பை இருகையிலும் அள்ளுகிறார்... கெடுபிடியான  வெள்ளைக்கார போலிஸ் அவரை தாக்குகிறது...மயக்கம் வர அடிக்கிறார்கள்...விட்டுச்சென்றவுடன் அவரை ரகசியமாக சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறார்கள்... மெதுவாக மயக்கம் தெளிந்து நினைவு வர, அவரை கவனித்து கொள்ள வந்த ஒரு பெண்மணி  அவரது இருகைகளிலும் அள்ளிய உப்பு இன்னமும் பிடிதளராமல் பத்திரமாக இருக்கிறதை கவனித்து சுட்டி காட்டுகிறார்... அப்பெண்ணிடமே இதை போட்டுவைக்க ஒரு டப்பா கேட்கிறார்.. ஒவல்டின் டப்பா எற்பாடு செய்ய உப்பை அதில் போட்டுவைக்க அப்பெண்மணி  டப்பாவை பத்திர படுத்திக்கொள்கிறார் ..இவருக்கு சிகிச்சைகள் ரகசியமாக நடப்பதை எப்படியோ அறிந்த வெள்ளையர் அரசு  இவரை கைது செய்கிறது  . ஒரு வருட கடுங்காவல் சிறை வாசம் முடிந்து வேதாரண்யம் திரும்பி உப்பு டப்பாவை பெற்றுக்கொள்வதோடு அப்பெண்மணியையும் மணக்கிறார். 

இப்படி தாத்தா அந்த உப்பின் கதையை முடிக்கிறார் . ராமுவும் ஊர் திரும்புகிறார். இதுவரையிலேயே எழுத்தாளர், வாசகனுக்கு வாசிப்பின் முழு சுகத்தையும் தந்துவிடுகிறார். இதை தாண்டி இதில் ஒரு முடிச்சு  வைக்கிறார் ...
ராமு திரும்பிய சில நாட்களில்  பாட்டி தவறிய செய்தி வருகிறது... செய்தி கேள்வி பட்டவுடன் தாத்தாவின் ஊருக்கு செல்கிறார் ...

 தாத்தா பாட்டி உடல் நிலை மோசமடைந்து  தவறிய விவரங்கள் சொல்லி பாட்டி ராமுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பதை சொல்கிறார்...ராமு தாத்தாவை படிக்கச் சொல்ல , உனக்கென்று பாட்டி எழுதியது  ஒட்டியும் உள்ளார்  என்று ராமுவையே படிக்க பணித்து ,என்ன எழுதியிருக்க போகிறார்  பாட்டி ..தாத்தாவை பார்த்து கொள்ள ஒரு நூறு தடவை எழுதியிருப்பார் என சொல்லிவிட்டு சடங்கு நிமித்தம் வெளியே செல்கிறார்.

 படிக்க ஆரம்பிக்கிறார் ராமு ......சிரஞ்சிவி ராமு என ஆரம்பித்தகடிதத்தில்  .... ஒரு அவசர சமையல் சந்தர்ப்பத்தில்  ஒவல் டின் உப்பு முழுமையும் சமையலுக்கு  தாத்தாவுக்கு தெரியாமல் உபயோகப்படுத்தப்பட்டு ...தாத்தாவுக்கு உணர்வு பூர்வமான விஷயமாகியதால் அவரிடம் இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் பக்கத்து கடையில் உப்பு வாங்கி  அதை பழையதாக்கி ஒவல்டின் டப்பாவில் அடைத்து வைத்துள்ளதாகவும்....65 வருடமாக தாத்தா அதை எடுத்து காட்டும் ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்து போவதையும் சொல்லி ....யாராவது சத்யாகிரக உப்பு வைத்துள்ளவர்களிடம் தேடி பிடித்து  பெற்று ஒவல் டின்னில் உள்ள உப்பை மாற்றி விடுமாறு ஒரு உணர்வு பூர்வ வேண்டுகோளோடு  கடிதத்தையை முடித்திருப்பார் .



தாத்தா வந்து கேட்க ``நிங்க சொன்ன மாதிரியே உங்களை பார்த்துக்கொள்ள எழுதியிருக்கிறார்  என சொல்லி விட்டு , மனம் முழுவதும்  சத்யாகிரக உப்பை கண்டுபிடிப்பதிலேயே இருப்பதாக கதை முடியும்.


உப்பு சத்யாகிரக  ஊர்வலத்தை  வழி நெடுக  வரவேற்பதை ..வெள்ளையனின் கட்டுப்பாட்டை மீறி  ஒவ்வொரு ஊர் மக்களும்   அவர்களுக்கு உணவளித்து  உபசரித்து  அனுப்பிவைப்பதை  ரா.கி.  அவர்கள்  மிக  அழகாக வர்ணித்திருப்பார் ..படிக்கும் பொழுது  நமக்கும் நம்மை அறியாமல்  தேசிய உணர்வு  கண்டிப்பாக வரும் .   

வெள்ளையர்களின் அடக்கு முறைகளையும் எடுத்து  எழுதியிருப்பார்   படிக்கும்பொழுது நமக்கும் ஆத்திரம் பொங்கும் .அப்புறம் பாட்டியின் கடிதமும் முழு விவரமாக இருக்கும். இடையில் இரண்டாம் உலகப்போர் பற்றிய நாவல் பற்றி வரும்.   

இந்த மாதிரி கதையை சுருக்குவது  நியாயம் இல்லாத விஷயம் தான்.

இக்கதையை புதியவர்கள் படித்து , நல்ல தமிழ் கதையாளரை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஒற்றை குறிக்கோளின் அடிப்படையில் சுருக்கப்பட்டது . இக்கதையை முழுமையாக படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும்  நிச்சயம் மனதிற்குள்ளாவது  ஒரு கட்டுரையை வடிப்பார்கள்

(இந்த பதிவு காந்தி நினைவு நாளில் / விடுதலை போராட்ட தியாகிகள் நினைவு நாளில்  வருவது தற்செயலாக அமைந்த நிகழ்வு.)

59 comments:

அப்பாதுரை said...

ராகிர எனக்குப் பிடித்த எழுத்தாளர். இந்தக் கதையைப் படித்த நினைவில்லை; தேடிப் பார்க்க வேண்டும்.
நல்ல அறிமுகம்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை ..ரா.கி.ர எழுத்துகளில் உள்ள எதார்த்தம் வசீகரிக்கும் ..'' ட்விஸ்ட் கதைகள்'' என்று அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது . கோவை ரயில் நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு முன் வாங்கியது ..ரா.கி.ர அவர்கள் எ. க. எ என்று எப்படி கதை எழுதுவது குமுதத்தில் தொடர் கட்டுரை வந்தது ஞாபகம் இருக்கும் ...அதில் கதை எழுதுவதின் நிறைய சூட்சுமங்களை சொல்லி இருப்பார் .. சுஜாதா அக்கட்டுரையை மிக சிலாகித்திருப்பார்...

ஸ்ரீராம். said...

படித்ததில்லை. சுவாரஸ்யமாக இருக்கிறது 'கை இல்லாத பொம்மை' உட்பட இவரின் வேறு சில கதைகள் படித்திருக்கிறேன். எங்கள் வீட்டு நூலகத்திலும் இருக்கும்.

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ... வாய்ப்பு கிடைக்கும் பொழுது படித்து பாருங்கள்..நிச்சயம் இதை விட சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை ``எங்களில்`` வரும்.

இளங்கோ said...

தண்ணீர் விட்டா வளர்த்தோம், சர்வேசா.. எனும் பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

பத்மநாபன் said...

பாரதியின் வரிகளை பொருத்தமாக சொன்ன தம்பிக்கு நன்றி ...கண்ணிரால் எப்படி காத்தோம் என்பதை ரா.கி.ர அவர்கள் வேதாரண்யம் சத்யாகிரக போராட்டத்தை உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்..

meenakshi said...

அருமை! இது போன்ற கதைகளை உங்களை போன்றவர்கள் அறிமுகப் படுத்துவதற்கே ஆயிரம் நன்றிகள் சொல்ல வேண்டும். மிக்க நன்றி! இந்த கதையை படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் நல்ல அறிமுகம் அளித்துள்ளீர்கள். உடனே முடியாவிட்டாலும் நிச்சயம் படித்துவிடுவேன்.

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி மீனாக்‌ஷி...
நல்ல கதைகளை எழுதும் ரா.கி.ர அவர்களது படைப்புகளை வாசிப்பது சுகானுபவம்...அறிமுகத்தை எற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

மோகன்ஜி said...

என் பிரிய பத்மநாபன். மௌனம் கலைத்து நான் பார்க்கும் முதல் பதிவு இது. மகிழ்ச்சியாய் இருக்கிறது, ரா.கி.ர வை நினைவு கூர்வது.தன் இருப்பை எழுத்தில் துருத்திக் கொள்ளாத தரமான எழுத்தாளர் அவர். இந்தக் கதையை படித்திருக்கிறேன்.
உங்களின் கதைச்சுருக்கம் அபாரம்.இதுவே நல்ல படைப்பாய் இருக்கிறது.அருமை.

உங்கள் வினாவல்களுக்கு என் நன்றி. சற்றுமுன் தான் ஒரு பதிவை இட்டிருக்கிறேன். பாருங்கள். களத்தில் இறங்கிவிட்டேன் சகோதரா.

பத்மநாபன் said...

இக்கதை நினைவுக்குவர உங்கள் விட்டை துறந்தேன் பதிவும் ஒரு காரணம்..பதிவில் தாய்மை உணர்வு போல் இங்கு தாய் நாட்டுணர்வு...

உங்கள் பதிவு காற்றிலேறிய இரண்டாம் நிமிடத்தில் வணக்கம் போட்டிருப்பேன் பார்த்திருப்பீர்கள்.

வலைக்கு திரும்பியது மகிழ்வு..முன்று மாதம் விட்டகுறை ..தொடாத குறை எல்லாம் பகிர்ந்து மகிழ்வோம்...

சாய்ராம் கோபாலன் said...

அற்புதம். யதார்த்தமான கதை.

சாய்ராம் கோபாலன் said...

huh, my template !!

பத்மநாபன் said...

நன்றி சாய் ... முழுதாக படித்தால் இன்னமும் நன்றாக இருக்கும் ...வலையில் சிக்கவில்லை ..அல்லைன்ஸ் வெளியீட்டு புத்தகம் ....கிழக்கு பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளார்களோ .. தெரியவில்லை ..தேட வேண்டும் ....

டெம்ப்லேட் பிளாக்கர் உபயம் .... தொந்திரவு பண்ணாமல் இதுவரை ஓடுகிறது ...

சிவகுமாரன் said...

ஆகா ரசிகமணி .
நீங்கள் அபூர்வமாக பூக்கும் குறிஞ்சி மலரை போல் எழுதுவதால் நான் கொஞ்சம் லேட்.
மன்னிக்கணும்.

இந்தக் கதையை படித்ததில்லை.
உங்கள் சுருக்க கதையே அருமை

ரா.கி.ரா ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர் . சிறு வயதில் அவரும் சுஜாதாவும் ஒருவரே என்று நினைத்துக் கொண்டதுண்டு. எப்படி கதை எழுதுவது , என்ற ஒரு தொடர் எழுதினார். நான் நிறைய முறை படித்தும் கதை எழுத வரவில்லை. பட்டாம்பூச்சி என்ற ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்திருக்கிறீர்களா ?

பத்மநாபன் said...

இங்கு பாலைவனத்தில் அலுவல் நேரம் வித்தியாசமாக இருப்பதால், மனமொன்றி அடிக்கடி பதிவிட முடிவதில்லை ...கிடைக்கும் நேரத்தை வாசிப்பதிலேயே செலவிட்டு விடுகிறேன்.

இந்த கதை ரா.கி.ர எடுத்து சென்றவிதம் நன்றாக இருந்தது சிவா...பகிர்ந்துகொண்டேன்.

பட்டாம்பூச்சி படிக்கவில்லை ..அடுத்தவிடுப்பில் பிடித்து படிக்கவேண்டும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ரா.கி.ர வின் `` ஒரு பிடி உப்பு ``//

இது படிச்சதில்லைங்க அண்ணா... உணர்வுகளையும் உறவுகளையும் அழகாக சித்தரிக்கும் கதை என தோன்றுகிறது... உங்க விமர்சனம் படிச்சதும் படிக்கும் ஆவல் தொத்திகிச்சு... தேடி பாக்கறேன்...நன்றி...

பத்மநாபன் said...

தங்கைமணி...வண்ணமா கதை எழுதற உங்களுக்கு, ரா.கி.ர எழுத்துக்கள் நிச்சயம் பிடிக்கும்...
கதை தலைப்பு : 65 வருட உறுத்தல்..
புத்தகம் : ட்விஸ்ட் கதைகள்.
வெளியீடு : அல்லயன்ஸ்
மின்காப்பி இருக்கற மாதிரி தெரியல ..இருந்தாலும் அடையாளம் வச்சு புத்தகத்துல அவ்வப்பொழுது படிக்கிற சுகமே தனி..
நன்றி....

அப்பாதுரை said...

பட்டாம்பூச்சி அருமையான மொழிபெயர்ப்பு.. papillon அசல் இன்னும் மேல். ராகிர கொஞ்சம் இளகின எழுத்து.

kashyapan said...

ர.கி.ரங்க ராஜன்,ஜ.ரா.சுந்தரேசன்,(பாக்கியம் ரமசாமி) எஸ்.ஏ.பி, புனிதன் ஆகா எப்பெற்பட்ட ஜமா! எப்படி இருந்த குமுதம்! மாதம் ஒருமுறை, மாதம் இருமுறை, மாத ம் மூன்றுமுறை மாதம் நான்கு முறை என்று வளர்த்தவர்கள் இன்று குமுதத்தில் சிறுகதைகளே வருவதில்லையே!---காஸ்யபன்

பத்மநாபன் said...

நன்றி அப்பாதுரை...பட்டாம்பூச்சி படிக்க தவறிய புத்தகம்..இப்ப பாபிலோனும் சேர்ந்து படிக்கும் ஆவல்...

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி காஷ்யபன்.. ஆரம்ப பள்ளி காலத்தில் அப்பா எல்லா பக்கமும் படித்து கிழே வைப்பார்... ஆறுவித்தியாசங்கள் 38 ஆம் பக்க மூலை என ஆரம்பித்தது படிப்படியாக எல்லா பக்கங்களுக்கும் முன்னேறினேன்..
அ.ர.சு அவர்களோடு புனிதன் அவர்களின் கூட்டணி கோலோச்சிய குமுதம் , இப்பொழுது ஒரிரு ஒரு பக்க கதையாலும் படங்களாலும் ஒப்பேறுவது ஏமாற்றம் தான்...

சாய்ராம் கோபாலன் said...

Papillon - Movie also was good but not to the level as story

சாய்ராம் கோபாலன் said...

Sorry, mistake

The movie with Steve McQueen was equally great.

பத்மநாபன் said...

//Nice // நன்றி சமுத்ரா...

பத்மநாபன் said...

சாய் சொன்னது ..படாமல் பட்டு டெலிட் ஆனதால் எடுத்து ஒட்டியுள்ளேன்

// kashyapan said... எப்படி இருந்த குமுதம்! //

காஸ்யபன் சார்,

ஆம், ஆனந்த விகடனும் சரி, குமுதமும் சரி - காலத்தின் கோலத்தில் நிரம்பவே மாறிவிட்டது.

என் நண்பன் மற்றும் என் பெற்றோர் இங்கே கொண்டு வந்தார்களே என்று ஆனந்தவிகடனும் / குமுதமும் எடுத்தல் ஒரு பக்க கதைகள் என்று போய், இப்போது அரைப்பக்கம், ஒரு பத்தி என்று யார் வேண்டுமென்றாலும் எழுதும் அவலம்.

மக்களின் ரசனை எனக்கென்னவோ மாறியது என்று தோன்றவில்லை. மாற்றம் வழங்கப்பட்டதில் மாறிவிட்டோமா அல்லது மாற்றம் நாம கேட்டுக்கொண்ட வினையா என்று புரியவில்லை

சாய்.

4 February 2011 8:35 PM

பத்மநாபன் said...

நன்றி சாய்...படங்களை அறிமுகப்படுத்தியதற்கு..

குமுதமும் விகடனும் ஒரு காலத்தில், பல எழுத்தாளர்களை தரிசித்து படிக்கும் சாளரமாக இருந்த நன்றிக்கு, பார்க்கும் போதேல்லாம் வாங்கி / எடுத்து ஆர்வமாக படிக்க ஆரம்பித்து பார்த்து முடிக்கிறோம்.

விகடன் / சுஜாதா பொற்காலத்தை கேட்கப் போனால்

அப்பாதுரை, கரையெல்லாம் சென்பகப்பூ காலத்தை சொல்வார்..

நான் பிரிவோம் சந்திப்போம் காலத்தை சொல்வேன்

அடுத்து ஆ / ஜீனோ காலத்தை சொல்வார்கள்..

இப்ப சொல்வதற்கு எதுவுமில்லாததால் வலையில் சிக்கியுள்ளோம்.

4 February 2011 9:10 PM

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

raji said...

ரா கி ர வின் பல எழுத்துக்களை வாசிக்கும் அனுபவம்
எனக்கு கிட்டியுள்ளது,எனினும் இது விடுபட்ட ஒன்று.நூலகத்தில் இன்றே தேட வேண்டும்.பகிர்வுக்கு நன்றி

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜி.... படியுங்கள் மிக நன்றாக இருக்கும்

பத்மநாபன் said...

அன்புடன் அன்புடன்மலிக்கா ...
மிக்க நன்றி ... என்னை போன்ற அத்திப்பூ பூக்கும் பதிவர்களையும் அறிமுகப்படுத்திய உங்கள் அன்பிற்கு நன்றி..நன்றி

எல் கே said...

ரசிகமணிஜி வழக்கம் போல் அப்டேட் வரவில்லை. அதுதான் இவ்வளவு லேட் வரதுக்கு. இந்தக் கதை படிக்கவில்லை. தேடி தேடி நெட்டில் படித்து விடுகிறேன்

எல் கே said...

உங்க rss feed செட்டிங் செக் பண்ணுங்க

பத்மநாபன் said...

என்னோட அப்டேட்ஸ் எனக்கே சரியாக வருவதில்லை ... எப்படின்னு கேட்கலாம்னு இருந்தேன் ... RSS feeds பார்க்க சொல்லியுள்ளீர்கள் ..முயற்சிக்கேறேன் சந்தேகம் இருந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன் ..நன்றி எல் .கே

வெங்கட் நாகராஜ் said...

அடடா! நீங்கள் ஒரு புதிய பதிவு போட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, இன்னமும் பார்க்காமல் விட்டுவிட்டேனே! ப்ளாக்கர் அப்டேட் ஆகவில்லை! அதுவும் ஒரு காரணம்.

ஒரு கைப்பிடி உப்பு! – என்ன ஒரு அற்புதமான கதை. ரா.கி.ர அவர்களின் பல சிறுகதைகளையும், மொழி பெயர்ப்பு நாவல்களையும் கல்லூரி படிக்கும் சமயத்தில் படித்திருக்கிறேன். கதைச் சுருக்கம் என்னை தூண்டுகிறது – முழு கதையையும் படிக்க. பகிர்வுக்கு மிக்க நன்றி பத்துஜி!

பத்மநாபன் said...

நன்றி வெங்கட்ஜி ..

ப்ளாக் அப்டேட் ஆகாதது பொதுவான கம்பிளைண்ட் தான்.. எல்.கே டிப்ஸ் கொடுத்துள்ளார் விரைவில் சரி செய்து விடுகிறேன்.

இந்த கதையில் ராகிர அவர்களின் எதார்த்த எழுத்தோட்டம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்

எல் கே said...

உங்கப் பதிவுகளின் அப்டேட் இப்ப வந்து இருக்கு

எல் கே said...

i think problem is solved. let me wait for your next post(eppa varum ????) and confirm

Porkodi (பொற்கொடி) said...

!!!! indha post mattum illai, now blogger shows almost all your posts as "new" updated posts! :-|

பத்மநாபன் said...

நன்றி எல்.கே ... நீங்க சொன்ன R.SS feed யை கொஞ்சம் ரிப்பேர் பண்ணவுடன் சரியாரிச்சு ( என்ன பண்ணினேன் கேட்டா சொல்லத் தெரியாது ) . அதை சொல்ல காலம் கடந்த ஞானத்துக்கு வரலாம் இருந்தேன் ... உங்க சுறுசுறுப்பே சுறுசுறுப்பு... மீண்டும் நன்றி

பத்மநாபன் said...

கொடி ....அப்டேட் ஆகிறதுல கொஞ்சம் தகராறு இருந்துச்சு ...எல்.கே தம்பி ( வலையுலக அண்ணாத்தே ) கைடன்சில் ரிப்பேர் செய்தவுடன் சரியான மாதிரி இருக்கு .... உங்களை என்னுடைய பழைய மொக்கைகளை படிக்க வைக்கும் சூழ்ச்சியும் உள்ளடக்கம்...
சரி ரா. கி .ர கதையை பத்தி ஒண்ணுமே சொல்லலை ...ரா. கி .ர நம்ம வாத்தியாரோட இனிய நண்பர் , ஆதர்ச எழுத்தாளர் .. சுஜாதா ,சுஜாதா என்று நாம் அழைக்கும் வாத்தியாரின் பெயர் மாற்றத்துக்கு இவரும் ஓரு காரணம்...

RVS said...

ரா.கி யோட கடைகள் ராகிமால்ட் மாதிரி. என்கிட்டே ஒன்றிரண்டு தொகுப்புகள் இருக்கு.
பிறத்தியார் கதைய கதையா சொல்றது ஒரு கலை. எவ்ளோ அட்டகாசமா சொல்லியிருக்கீங்க பத்துஜி! ரா.கி. யோட கட்டுரைத் தொகுப்பு ஒன்னு இருக்கு. ரிடையர் ஆகி வீட்ல சும்மா உட்கார்ந்திருந்தா என்னென்ன தொந்தரவு வரும் அப்படின்னு அவரையே மையமா வச்சு எழுதி பூந்து விளையாண்டிருப்பார். படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். ;-)

RVS said...

ஐயா மன்னிக்கணும்.. பிளாக்கர் அப்டேட் ஆகா மாட்டேங்குது.. அதான் தாமஸம்!!!
எல்.கேவின் சீரிய அறிவுரையில் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்.. ;-)

பத்மநாபன் said...

ஆமாங்க வலைப்பூ தொழில் நுட்பம் பிடி படமாட்டிங்குது...அப்பப்ப சிக்கிக்குது ...
நன்றிஆர்.வி.எஸ் ... உங்கள் முடிச்சு கதைகள் / மோகன்ஜியின் ''வீட்டை துறந்தேன் படித்தவுடன் நினைவு வந்த கதை ..
.. ரிட்டையர்மென்ட் கதை படித்த ஞாபகம் ..மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ... தன்னிலை கதைகளுக்கு ரா.கி .ர வை விட்டால் ஆள் கிடையாது .
உங்கள் பிசி ஷெட்யுலில் ( வலை + வேலை ) வந்ததே பெரிது ..இதில் தாமதம் என்று ஒன்றுமில்லை .. மீண்டும் நன்றி....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா இருக்கு...

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி MANOநாஞ்சில்மனோ ..மிக்க நன்றி

ADHI VENKAT said...

இப்ப தான் உங்க ப்ளாக்கர் அப்டேட் ஆகுது. இந்த புத்தகத்தை இது வரை படித்ததில்லை. நீங்க கதை சொன்ன விதத்தில் அந்த பாட்டி என் கண்ணுக்குள் இருக்கிறார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது வாங்கி படிக்கணும்.

பத்மநாபன் said...

@ கோவை டு டில்லி
ஆமாங்க சகோ ... அப்டேட் பிரச்சினை தீர்ந்து இப்ப மொத்தமா அப்டேட் ஆகுது ... கதையில பாட்டியோட உணர்வுகளை சரியா புரிஞ்சிட்டிங்க .. உப்பு ஓரு உதாரணம் ...இது மாதிரி சின்ன சின்ன உறுத்தல்கள் நேர் வாழ்வில் நிறைய இருக்கிறது ...ரா.கி. ர ..கதை சொல்லும் பாணியே தனி ..இன்னமும் இரண்டுபக்கம் கூட படிக்கலாம் இருக்கும்

கோலா பூரி. said...

mikavum nekizssiyaanapathivu

பத்மநாபன் said...

நன்றி கோமு... நெகிழ்ச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் எழுதியிருப்பார் ரா.கி.ர

Pranavam Ravikumar said...

Its very nice.. Let me thank you for sharing with us.

பத்மநாபன் said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரவி .... தொடர்பில் இருப்போம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக் கதையை நான் இதுவரைப் படித்ததில்லை. தாங்கள் எழுதியுள்ள கதைச்சுருக்கமே மிகவும் எனக்குப் பிடித்துப் போனது. இதுபோல இன்னும் பல நல்ல கதைகளை தயவுசெய்து தேர்ந்தெடுத்துப் படித்து, ஜூஸ் பிழிந்து எங்களுக்கு சுலபமாக் அருந்தத் தாருங்கள். தங்களின் இந்தப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திருமதி ராஜி அவர்களின் ப்ளாக்குக்குப் போன நான், தற்செயலாக உங்கள் ப்ளாக்குக்கும் முதன் முறையாக வருகை தந்து, ஒரு நல்ல (உப்புச் சப்புள்ள) கதையைப் படித்ததில் மகிழ்வடைகிறேன்.

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி வை .கோ சார்.. உங்கள் கருத்தை மனதிலிருத்திக் கொள்கிறேன் ...வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செயல்படுத்துகிறேன்... ரா.கி. ர வின் இந்த முழு சிறுகதை உண்மையில் ,தாய்மை / தாய்நாட்டு உணர்வுகளை எடுத்துக் காட்டி சிறப்பாக இருக்கும்..

மனோ சாமிநாதன் said...

அருமையான சிறுகதை. சுருக்கி இருந்தாலும் அதன் சாரமும் தாக்கமும் சிறிதும் குறைந்ததாக‌்த் தெரியவில்லை. சுதந்திர போராட்டங்களில் இணைந்த இரு உள்ள‌ங்களின் மெல்லிய உணர்வுகள் பல வருடங்களைக் கடந்தும் அத்தனை நேசமாகவும் ஆழமாகவும் இருப்பதும் அந்த நெஞ்சார்ந்த அன்பின் தவிப்பும் மனதை கனமாக்குகிறது!!

பத்மநாபன் said...

அழகாக கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி மனோ மேடம்..

சாமக்கோடங்கி said...

கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன்.. நன்றி..

பத்மநாபன் said...

நன்றி பிரகாஷ் ..உத்தரவாதமான நல்ல கதைகள் ரா .கி. ர அவர்களிடமிருந்து. படித்து மகிழுங்கள் ...

தக்குடு said...

கதை படிக்கும் போதே நாம அதுக்கு உள்ள போயிட்டோம்னா கதாசிரியர் வெற்றி பெற்றாச்சு!னு அர்த்தம். நல்ல தொகுப்பு ரசிகமணி அண்ணா.

Note - அண்ணா, நம்ப ரெண்டு பேரும் ஒரே கலர் டெம்ப்ளேட்!!..:)

பத்மநாபன் said...

தக்குடு ...ரா. கி. ர வின் எதார்த்தமும் எளிமையும் அவரது கதைகளை திரும்ப திரும்ப படிக்க வைக்கும் .

இந்த டெம்ப்ளேட் இப்ப நிறைய பேர் உபயோக படுத்துகிறார்கள் ... சிக்கல் இல்லாமல் ஓடுகிறது ...

Powered By Blogger